பரமக்குடி அருகே மூதாட்டி நடுகல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே வழிமறிச்சான் கிராமத்தில் பழமையான சிற்பம் இருப்பதாக அக்கிராமத்தைச் சேர்ந்தவர் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணன், மீனாட்சிசுந்தரம் ஆகியோர் அங்கு சென்று களஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த சிற்பம் ஒரு மூதாட்டிக்கு எடுக்கப்பட்ட நடுகல் என்பதை கண்டறிந்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், இந்த நடுகல் சிற்பம் இரண்டரை அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட கல்லில் புடைப்புச்சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின் 2 கைகளிலும் காப்பும், கை வளையல்களும், கழுத்தில் ருத்ராட்ச மாலை ஆபரணங்களும், நீண்ட காதும் தெளிவாக நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது.
இந்த புடைப்பு சிற்பம் வயது முதிர்ந்த ஒரு மூதாட்டியின் சிற்பமாகும். இந்த சிற்பத்தின் வடிவமைப்பும் அணிந்துள்ள ஆபரணங்களையும் வைத்து பார்க்கும்போது, சமூகத்தில் மிகவும் மதிக்கத்தக்க பெண்மணியாக இருந்திருக்கலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.