பராமரிப்பு பணிகளுக்கு பின் முறையான சோதனையின்றி சிக்னல் பணியாளர்கள் சிக்னலை இயக்குவதாக ரயில்வே வாரியம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த 2ம் தேதி 3 ரயில்கள் தடம் புரண்ட விபத்தில் 289 பேர் பலியாகினர். இந்த விபத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக நேரடியாக ஆய்வு நடத்திய 5 பேர் அடங்கிய குழுவினரில் ஒருவர் சிக்னல் கோளாறுகளே விபத்துக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் பல்வேறு ரயில்வே மண்டலங்களில் பராமரிப்பு பணிகளுக்கு பிறகு முறையான சோதனை செய்யாமல் சிக்னல் தரப்படுகிறது. இதுபோன்று 5 சம்பவங்கள் நடந்துள்ளன. சரியான சோதனைகளை செய்யாமல் சிக்னல் தரக்கூடாது என பலமுறை சிக்னல் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதுபோன்ற சம்பவம் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது மிகவும் ஆபத்தானது என்று அதில் கூறப்பட்டுள்ளது.