நிலவில் ஆக்ஸிஜனை உருவாக்கும் புதிய தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகள் தற்போது தீவிரமாக நடக்கின்றன. சியரா ஸ்பேஸ் நிறுவனம், நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் இது தொடர்பான தீவிர ஆய்வில் ஈடுபட்டது. நிலவில் காணப்படும் ரெகோலித் துகள்களை சூடுபடுத்தி, அதிலிருந்து ஆக்ஸிஜனை பிரித்தெடுக்க முடியும் என்பதை நிரூபிக்க அவர்கள் முயன்றனர். 1650°C வெப்பத்தில் உருகிய நிலையில், சில எதிர்விளைவு மூலக்கூறுகள் சேர்க்கப்பட்டபோது ஆக்ஸிஜன் குமிழிகள் உருவாகின. இந்த முறையை நிலவின் குறைந்த ஈர்ப்புவிசையில் செயல்படுத்துதல் என்பது மிகப்பெரிய சவாலாகும். ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணினி மாதிரிகள் மூலம் குறைந்த ஈர்ப்புவிசையின் தாக்கத்தை ஆய்வு செய்துள்ளனர்.
நிலவில் ஆக்ஸிஜனை உருவாக்கும் பல்வேறு முறைகள் ஆய்வில் உள்ளன. 'மோல்டென் ரெகோலித் எலெக்ட்ரோலிசிஸ்' என்ற முறை, மின்சாரத்தால் ஆக்ஸிஜனை பிரித்தெடுக்கும் வழியாக செயல்படும். ஆனால், ரெகோலித்தின் பிசுபிசுப்பான தன்மையால் குமிழிகள் எலக்ட்ரோடுகளில் சிக்கிக்கொள்வது சிக்கலாக இருக்கிறது. இதற்காக குமிழிகளை அதிர்வுகளால் பிரிக்க முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி மாணவர்கள் ‘சோனிக்கேட்டர்’ கருவியை உருவாக்கி, ஒலி அலைகள் மூலம் குமிழிகளை எலக்ட்ரோடுகளில் இருந்து பிரிக்க முயன்றனர். நிலவில் உள்ள இரும்பு, டைட்டேனியம் போன்ற உலோகங்களை பிரித்து விண்வெளி வீரர்களுக்குத் தேவையான பொருட்களை தயாரிக்கவும் இந்த தொழில்நுட்பம் உதவலாம். மேலும், உருகிய ரெகோலித்தை கட்டடக் கல்லாக மாற்றி நிலவில் கட்டிடங்களை உருவாக்கவும் இது பயனுள்ளதாக இருக்கலாம்.