பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது ஈரான் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் அதன் தூதரை திரும்ப பெற்றுள்ளது.
ஈரான் எல்லை ஒட்டிய பாகிஸ்தான் பலுசிஸ்தான் பகுதியில் ஜெய்ஷ் -அல்-அதில் பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. அங்கு அதன் இரண்டு நிலைகள் மீது ஈரான் கடந்த செவ்வாய்க்கிழமை ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் திடீரென தாக்குதல் நடத்தியது. இந்த வான்வழி தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் பலியாகினர். மூன்று சிறுமிகள் காயமடைந்தனர். பாகிஸ்தான் வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்து ஈரான் தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தான் இறையாண்மை சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐநா சாசன விதிகள் ஆகியவற்றை ஈரான் மீறி உள்ளது என்று பாகிஸ்தான் அரசு கடும் குற்றம் சாட்டி வருகிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் மும்தாஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஈரானுக்கான பாகிஸ்தான் தூதரை திரும்ப பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
அத்துடன் இருநாட்டு தலைவர்கள் மேற்கொள்ள இருந்த பரஸ்பர பயணத் திட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து ஈரான் தரப்பில் கூறுகையில், பயங்கரவாத குழுவின் எல்லை கடந்த செயல்பாடுகளை தடுக்குமாறு முன்பே பாகிஸ்தான் அரசிடும் பலமுறை வலியுறுத்தி வந்தோம். எனினும் அக்குழுவின் செயல்பாடுகள் தொடர்ந்ததால் இந்த தாக்குதல் நடத்த வேண்டியதாகி விட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஈரானின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானும் வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.