பாகிஸ்தான் பழங்குடியின கிராமங்களில் கலவரம் ஏற்பட்டதில் 42 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானில் கைபர் மாகாணத்தில் உப்பர் குர்ம் என்ற மாவட்டத்தில் இரண்டு பழங்குடியின சமூகத்தினர் இடையே நில உரிமை தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களுக்கு முன் இவர்களுக்குள் கடும் மோதல் ஏற்பட்டது. அப்பொழுது ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். உசேரா என்ற கிராமத்தில் இந்த கலவரம் ஏற்பட்டது. பின்பு பிற கிராமங்களுக்கும் பரவியது. இதனால் அப்பகுதி போர்க்களமாக காட்சியளித்தது. இந்த வன்முறையில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். அரசு சார்பாக இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பிறகு தற்போது சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இரு தரப்பிலும் ஒப்பந்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபட்டனர். துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த கலவரத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உள்ளது. 170 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தற்போது அதிகாரிகள் இவர்களிடையே அமைதியை நிலைநிறுத்த பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.