உலகிலேயே முதல் முறையாக, செயற்கை நுண்ணறிவு உதவியுடன், பக்கவாதம் பாதித்த ஊனமுற்ற பெண் ஒருவர் பேசும் சக்தி பெற்றுள்ளார். டிஜிட்டல் அவதார் மூலம், அவரது முக பாவனை மற்றும் அவரது எண்ணங்கள் வார்த்தைகளாக வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த 18 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், பேசும் திறனை முழுமையாக இழந்திருந்தார். மேலும், அவரால் இயல்பாக அசைய முடியாது. இத்தகைய குறைபாடு உள்ள பெண்ணுக்கு, மூளையில் எலெக்ட்ரோடு பொருத்தப்பட்டுள்ளது. ஒரு சிறிய காகித துண்டு அளவிலான 253 எலக்ட்ரோடுகள் அவரது மூளையில் பொருத்தப்பட்டுள்ளன. இவை, மூளையில் உள்ள பேச்சு மற்றும் முகபாவனை சம்பந்தப்பட்ட பாகத்தில் ஏற்படும் மின் ஆற்றலை கணக்கிட்டு, அதனை வார்த்தைகளாகவும் முகபாவனைகளாகவும் வெளியிடுகிறது. டிஜிட்டல் அவதார் மூலம் இவை வெளி உலகத்திற்கு காட்டப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் 28% தவறாக இருந்துள்ளதாகவும், ஏனைய முறைகளில் துல்லியமாக செயல்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. சராசரியாக நிமிடத்திற்கு 78 வார்த்தைகளை மூளையின் எண்ண ஓட்டத்தை வைத்து இயல்பான உரையாடலை போல அது வெளியிடுகிறது. இந்த தொழில்நுட்பம் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இதுபோன்ற பாதிப்புகளை கொண்டுள்ள நோயாளிகளுக்கு, இதன் மூலம் மிகச் சிறந்த தீர்வுகள் கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.