பேடிஎம் நிறுவனத்தின் பங்கு மதிப்பு இன்று 5% அளவுக்கு சரிந்தது. அத்துடன் வரலாற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் போது பேடிஎம் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 317.4 ரூபாயாக இருந்தது. மேலும், கடந்த 6 மாத காலத்தில் பேடிஎம் பங்குகள் கிட்டத்தட்ட 65% வீழ்ச்சி அடைந்துள்ளதாக பங்குச் சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
பேடிஎம் நிறுவனத்துடன் முக்கிய கூட்டணியில் இணைந்திருக்கும் ஆதித்ய பிர்லா பைனான்ஸ் நிறுவனம் தனது கடன் உத்தரவாதத்தை திரும்ப பெறுவதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து, இன்று பேடிஎம் பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. ஏற்கனவே, பிரமல் பைனான்ஸ், கிளிக்ஸ் கேப்பிட்டல் ஆகிய நிறுவனங்கள் பேடிஎம் கூட்டணியில் இருந்து விலக பரிசீலித்து வருகின்றன. இதனால், பேடிஎம் நிறுவனத்தின் கடன் வழங்கலில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட உள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி பேடிஎம் பேமென்ட் வங்கி மீது எடுத்த நடவடிக்கைகள் இதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.