தமிழகத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கான சாலை வரியை 5 சதவீதம் வரை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசின் வருவாயில் போக்குவரத்துத் துறை முக்கியமான பங்கு வகித்து வருகிறது. கடைசியாக, கடந்த 2008-ல் இருசக்கர வாகனங்களுக்கும், 2010-ல் கார்களுக்குமான வரி உயர்த்தப்பட்டது. அதன்படி, இரு சக்கர வாகனத்தின் விலையில் 8 சதவீதம், கார்களுக்கு ரூ.10 லட்சத்துக்குள் விலை இருந்தால் 10 சதவீதம், ரூ.11 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள கார்களுக்கு 15 சதவீதம் சாலை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்து ஆணையரகம் சார்பில், வாகனங்களின் சாலை வரியை உயர்த்துவது தொடர்பான கருத்துரு தமிழக அரசுக்கு கடந்தாண்டு அனுப்பப்பட்டது. இந்நிலையில் தற்போது சாலை வரியை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன்படி, வாகனங்களைப் பொறுத்து 2 முதல் 5 சதவீதம் வரை சாலை வரி உயரக் கூடும் எனக் கூறப்படுகிறது. சாலை வரி உயர்வால் வாகனங்களின் விலையிலும் கணிசமான உயர்வு இருக்கும். இதுகுறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.