பிரதமர் நரேந்திர மோடி, இருநாள் அதிகாரப்பூர்வ பயணமாக பிப்ரவரி 12-ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பாரிஸ் பயணத்திற்குப் பிறகு, பிரதமர் மோடி நேராக வாஷிங்டன் டி.சி.க்கு புறப்படுவார் என கூறப்படுகிறது.
இது, டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர், மோடி மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணமாகும். பிப்ரவரி 12-ஆம் தேதி மாலை மோடி அமெரிக்க தலைநகரில் தரையிறங்குவார் என்றும் மறுநாள் டிரம்ப்-மோடி சந்திப்பு நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.