கர்நாடகத்தில் பிரதமர் மோடி 6 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதை தொடர்ந்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜனதா ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்பதால் பிரதமர் மோடி மாநிலத்தில் தொடர் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று பசவராஜ் பொம்மை, எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.
இதையடுத்து சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே 7 முறை கர்நாடகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி பல ஆயிரம் கோடி ரூபாய் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்திருந்தார். இந்நிலையில், சட்டசபை தேர்தலுக்காக கர்நாடகத்தில் பிரதமர் மோடி 6 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார். குறிப்பாக 16 மாவட்டங்களுக்கு செல்லும் அவர், 23 இடங்களில் பொதுக்கூட்டம் மற்றும் சாலையோர பிரச்சார நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் பங்கேற்று பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்ட உள்ளார். இந்த 6 நாட்களும் 3 கட்டங்களாக பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார்.