பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நாளை அமெரிக்காவுக்கு செல்லவிருக்கிறார்.
அவர் வில்மிங்டன் நகரில் நடைபெறும் ‘க்வாட்’ கூட்டமைப்பின் 4-ஆவது உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார். இந்த சந்திப்பில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடக்கவுள்ளன. மேலும், இருதரப்பு ஒப்பந்தங்களுக்கும் கையொப்பமிடப்படும் என வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
மோடி, ‘க்வாட்’ உச்சிமாநாட்டுக்கு அடுத்ததாக, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நடைபெறும் ‘எதிர்காலத்துக்கான மாநாட்டிலும்’ உரையாற்ற உள்ளார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து செயல்படும் ‘க்வாட்’ கூட்டமைப்பின் இந்த மாநாடு, அமெரிக்காவின் டெலாவர் மாநிலத்தில் நடக்கிறது.
மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனேசி, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோருடன் மோடி தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்துவார். இதன் பின்னர், இந்திய-பசிபிக் வளமைக்கான பொருளாதார கட்டமைப்பு (ஐபிஇஎஃப்) தொடர்பான ஒப்பந்தம் உட்பட பல முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்படும்.