ரஷ்யாவில் உள்ள மத வழிபாட்டு தளங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 17 பேர் பலியாகி உள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று இரவு காகசஸ் மாகாணத்தில் உள்ள மகஞ்சகலா மற்றும் டர்பேண்ட் ஆகிய நகரங்களில் உள்ள வழிபாட்டு தலங்கள் மீது பயங்கரவாதிகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் கிறிஸ்தவ மற்றும் யூத வழிபாட்டு தலங்கள் மீது குறிவைக்கப்பட்டது. தலங்களுக்குள் சென்ற பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். மேலும் மத போதகரை கழுத்தை அறுத்து கொன்றனர். மத வழிபாட்டு தளங்களை தீவைத்து கொளுத்தினர். டர்பேண்ட் நகரில் உள்ள சோதனை சாவடியை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் 17 பேர் பலியாகினர். இதில் பெரும்பாலானோர் போலீசார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த செய்தியறிந்து கூடுதல் படையினர் தாக்குதல் சம்பவம் நடைபெற்ற இடங்களுக்கு விரைந்தனர். அப்போது பயங்கரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஆறு பயங்கரவாதிகள் பலியாகியுள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக தெரியவந்துள்ளது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் மாஸ்கோவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 137 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.