கத்தார் ஏர்வேஸ், ஆஸ்திரேலியாவின் பிரபலமான விமான நிறுவனமான விர்ஜின் ஆஸ்திரேலியா ஏர்லைன்ஸில் 25% பங்கை வாங்க திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடு, பெயின் கேபிடல் நிறுவனத்திடம் இருந்து மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஒப்பந்தம், அரசின் ஒப்புதலைப் பெற்றவுடன் நடைமுறைக்கு வரும். இது கத்தார் ஏர்வேஸின் உலகளாவிய நெட்வொர்க்கை மேலும் விரிவுபடுத்தும்.
ஏற்கனவே, தென்னாப்பிரிக்காவின் SA Airlink மற்றும் ரூவாண்டா ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பிற விமான நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள கத்தார் ஏர்வேஸ், தற்போது ஆஸ்திரேலியா சந்தையை கைப்பற்றும் முயற்சியாக இந்த முதலீட்டில் ஈடுபடுகிறது. அத்துடன், கத்தார் ஏர்வேஸின் இந்த முதலீடு, விர்ஜின் ஆஸ்திரேலியா ஏர்லைன்ஸ் விரைவில் ஐபிஓ வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 2025 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இருந்து விர்ஜின் ஆஸ்திரேலியா ஏர்லைன்ஸ், தோஹாவிற்கு நேரடி விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது.