அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அலட்சியமாக சிகிச்சைகள் வழங்கப்படுவதாக பொய்யான தகவல்கள் பரவி வருகிறது. அதனை யாரும் நம்ப வேண்டாம். அரசு மருத்துவமனைகளின் மூலம் தினந்தோறும் 6,00,000 பேர் பயனடைகிறார்கள், 70,000 நபர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகிறார்கள், 10,000 அறுவை சிகிச்சைகள் நடைபெறுகிறது என்றார்.
நீட் விலக்கு மசோதா ஜனாதிபதியிடம் இருந்து உள்துறை அமைச்சகத்திற்கும், சுகாதார துறைக்கும் கல்வித்துறைக்கும் அனுப்பப்பட்டது. சுகாதார துறையும் கல்வித்துறையும் சில கேள்விகளை எழுப்பி இருந்தனர். தமிழக அரசு அந்த கேள்விகளுக்கான பதில்களை அனுப்பி ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்துக்கொண்டிருக்கிறது என்று கூறினார்.