ஈரப்பதத்தை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்படுவதால், குறுவை பருவ நெல் மூட்டைகள் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா பருவ நெல் சாகுபடி முக்கியமானது. இப்பருவத்தில் விளையும் நெல், அரசின் உணவு தானிய தேவைக்கு அதிகம் கொள்முதல் செய்யப்படுகிறது. வழக்கமாக 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும். நடப்பாண்டு முன்கூட்டியே மேட்டூர் அணை பாசனத்திற்கு திறக்கப்பட்டதால், 5.20 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடந்துள்ளது.
நெல் கொள்முதல் மையங்கள் செப்., 1 முதல் செயல்படும் என அரசு அறிவித்தது. ஆனால், நிரந்தர நெல் கொள்முதல் மையங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இவற்றில், 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால், நெல் மூட்டைளை விற்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என மத்திய உணவுத் துறையிடம் தமிழக அரசு கேட்டுள்ளது. ஆனால், அனுமதி கிடைக்கவில்லை. இந்த நடவடிக்கையை கொள்முதல் துவங்கும் முன்பே தமிழக அரசு செய்திருக்க வேண்டும் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.