அமெரிக்காவைச் சேர்ந்த வால்ஸ்ட்ரீட் ஜர்னல் நிறுவனத்தின் பத்திரிக்கையாளரான இவான் கார்ஸ்கோவிச், ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அவர் மீது உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பனிப்போர் காலத்திற்குப் பின், உளவு குற்றத்திற்காக அமெரிக்க பத்திரிக்கையாளரை ரஷ்யா கைது செய்வது இதுவே முதல் முறையாகும்.
ரஷ்யாவில் உள்ள யூரல் மலை பகுதியின் எகடரின்பர்க் பகுதியிலிருந்து அவர் கைது செய்யப்பட்டதாக ரஷ்ய உளவுப் பிரிவு துறையினர் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் ரகசியத் தகவல்களை, இடைமறித்து சேகரிக்க முயன்றதாக அவர் மீது அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும், அமெரிக்க அரசின் உத்தரவின் பெயரில், அவர் உளவு வேலை பார்த்ததாக கூறுகின்றனர். அவரது குற்றம் உறுதி செய்யப்படும் பட்சத்தில், அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இவான், இந்த வாரத் தொடக்கத்தில், மேற்குலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ரஷ்ய பொருளாதாரம் எந்த வகையில் சரிந்து உள்ளது என்பது பற்றி செய்தி கட்டுரை ஒன்றை அமெரிக்காவுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.