உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே, போர் சூழல் தொடர்ந்து நீடித்து வருகிறது. தொடர்ச்சியாக தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், உக்ரைன் நாட்டின் உளவு படகை தாக்கி அழித்ததாக ரஷ்யா அறிவித்துள்ளது. கருங்கடல் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யாவின் இந்த அறிவிப்பு போர் சூழலை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.
தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகிய பின்னர், உக்ரைனில் இருந்து தானியங்கள் வெளியேறும் துறைமுகங்கள் மற்றும் கருங்கடல் பகுதிகளில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. அந்த வகையில், ரஷ்யாவின் எரிவாயு மையத்திற்கு அருகே வந்த உக்ரைன் நாட்டின் உளவு படகு தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. சுகோய் போர் விமானம் மூலம் படகு தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதே வேளையில், மாஸ்கோவை குறி வைத்து, உக்ரைன், தொடர் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.