ஊதிய உயர்வு மற்றும் தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் நான்காவது வாரத்தை எட்டிய நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை தொழிற்சாலை சாம்சங்கின் இந்திய வருவாயில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதால், இந்த போராட்டம் நிறுவனத்தின் உற்பத்தியை பெரிதும் பாதித்துள்ளது. தொழிலாளர்கள் தற்போது மாதம் ரூ.25,000 சம்பளம் பெற்று வருகின்றனர். அவர்கள் மூன்று ஆண்டுகளுக்குள் ரூ.36,000 ஆக சம்பள உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்க மறுக்கும் சாம்சங் நிறுவனம், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் வேலையை இழக்க நேரிடும் என எச்சரித்துள்ளது. இருப்பினும், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.