தேர்தல் பத்திரம் குறித்த விவரங்களை நாளை மாலைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அவகாசம் கேட்டு முறையீடு செய்த வங்கியின் மனுவை நிராகரித்து தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2011 ஏப்ரல் முதல், தேர்தல் நடவடிக்கைகளுக்காக நன்கொடைகளாக வழங்கப்பட்ட பணம் குறித்த விவரங்களை வெளியிடுவதற்கு, வரும் ஜூன் 30 வரை கால அவகாசம் தேவை என பாரத ஸ்டேட் வங்கி மனு அளித்திருந்தது. ஆனால், “இந்தியாவில் 24 க்கும் குறைவான அரசியல் கட்சிகளே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றுள்ளன. எனவே, அவை சார்ந்த விவரங்களை எளிமையாக திரட்ட முடியும். இதற்கு அவகாசம் தேவையில்லை” என கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மேலும், நாளை மாலைக்குள் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி, வங்கிகள் மூலம் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பெறுவது சட்டத்துக்கு புறம்பானதாக தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.