செனகலின் புதிய அதிபராக எதிர்க்கட்சித் தலைவர் பாசிரோ டியா மேபே வெற்றி பெற்றுள்ளார்.
ஆப்பிரிக்க நாடான செனகலில் கடந்த ஞாயிறன்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் 44 வயதான எதிர்க்கட்சித் தலைவர் பாசிரோ டியா மேபே வெற்றி பெற்றுள்ளார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நீதிமன்ற அவமதிப்பு, அரசு மீது அவதூறு பரப்பியது, பொய்களை பரப்பியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளில் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாகதான் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் தேர்தலில் போட்டியிட்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே செனகலில் பதட்டமான அரசியல் சூழ்நிலை நிலவியது. ஞாயிறன்று லட்சக்கணக்கான மக்கள் ஓட்டளிக்க முன்வந்தனர். பாசிரோ அந்நாட்டின் ஐந்தாவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வாக்குப்பதிவு அன்று 71% மக்கள் ஓட்டு போட்டனர் என்று தகவல்கள் கூறுகின்றன. வாக்குப்பதிவு சமூகமாக நடைபெற்றது. வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.