வங்கதேச முன்னாள் சட்ட அமைச்சர் அனிசுல் மற்றும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆலோசகர் சல்மான் ரஹ்மான் ஆகியோர் கொலை வழக்கில் காவல் துறையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரும் வங்கதேசத்தை விட்டு கடல் வழியாக தப்பிக்க முயன்றனர். அப்போது டாக்கா அருகே காவல்துறையினர் இவர்களை கைது செய்தனர். கடந்த ஜூலை 19ஆம் தேதிவங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது டாக்காவின் முகமது பூர் பகுதியில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் அபு சயீது என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவரது உறவினர் காவல் துறையில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் உட்பட ஆறு பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 16ஆம் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் இருவர் பலியான விவகாரத்தில் அனிசுலுக்கும் சல்மானுக்கும் தொடர்பு இருப்பதால் காவல்துறை அவர்களை கைது செய்துள்ளனர். ஷேக் ஹசீனா மீதான கொலை வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது. அதற்கு அடுத்த சில மணி நேரங்களில் சல்மானும் அனிசுலும் கைது செய்யப்பட்டனர்.