ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று உறைபனி கொட்டத் துவங்கியது. குறைந்தபட்ச வெப்பநிலை 1 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் துவங்கி நவம்பர் 2-வது வாரம் வரை பெய்யும். அதன்பின் டிசம்பர் மாதம் துவக்கம் வரை பனி நீர் காணப்படும். டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறை பனி விழும். இதனால் தேயிலை, மலை காய்கறிகள் விவசாயம் பாதிக்கும்.
இந்நிலையில் நீலகிரியில் நேற்று உறைபனி கொட்ட துவங்கியுள்ளது. அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியள்ளது. அதிகாலை நேரங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளை நிற கம்பளம் விரித்தார் போல் புல்வெளிகள் காட்சியளிக்கும். டிசம்பர் மாதம் விழும் பனியால் பெரும்பாலான தேயிலை செடிகள், புல் மைதானம், காய்கறி செடிகள் கருகி விடும். இதனை காக்க தென்னை ஓலைகள், தாவை எனப்படும் செடிகள் மற்றும் வைக்கோலை போட்டு விவசாயிகள் பயிர்களை காத்து வருகின்றனர்.