ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க், செவ்வாய் கிரகத்திற்கான தனது திட்டங்களை மேலும் விரிவுபடுத்தியுள்ளார். செப்டம்பர் 22 அன்று, அடுத்த 2 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்திற்கு 5 ஸ்டார்ஷிப் விண்கலங்களை ஆளில்லாமல் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார். இந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டால், முதல் குழுவினர் கொண்ட பயணம் 4 ஆண்டுகளில் தொடங்கப்படலாம் என்றும், தாமதங்கள் ஏற்பட்டால் இன்னும் 2 ஆண்டுகள் கூடுதலாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, எலோன் மஸ்க் செவ்வாய் கிரகத்திற்கான ஆளில்லாத பயணங்களை 5 ஆண்டுகளிலும், குழுவினர் கொண்ட பயணங்களை 7 ஆண்டுகளிலும் தொடங்கலாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், விண்வெளிப் பயண திட்டங்கள் எப்போதும் மாறக்கூடியவை என்பதற்கு, நாசாவின் ஆர்ட்டெமிஸ் 3 நிலவுப் பயணம் செப்டம்பர் 2026 க்கு தள்ளிவைக்கப்பட்டதும், ஜப்பானிய கோடீஸ்வரர் யுசாகு மேசாவா ஸ்பேஸ்எக்ஸ் சந்திரப் பயணத்தை ரத்து செய்ததும் சான்றாகும். எனவே, இந்த திட்டங்களும் மாறும் என்று கூறப்படுகிறது.