ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் போலரிஸ் டான் விண்கலத்தில் சென்ற ஜாரெட் ஐசக்மேன், ஸ்காட் “கிட்” போட்டீட், அன்னா மேனன் மற்றும் சாரா கில்லிஸ் ஆகியோர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:37 மணிக்கு பூமிக்கு திரும்பினர். 1972 ஆம் ஆண்டு அப்பல்லோ திட்டத்திற்குப் பிறகு மனிதர்கள் மேற்கொண்ட மிகத் தொலைவான விண்வெளிப் பயணம் இதுவாகும். ஐந்து நாட்கள் நீடித்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில், முதல் தனியார் விண்வெளி நடை, வயலின் வாசித்தல் என பல சாதனைகள் நிகழ்ந்தன.
புளோரிடாவின் ட்ரை டோர்டுகாஸ் அருகே கடலில் க்ரூ டிராகன் விண்கலம் பாதுகாப்பாக தரை இறங்கியது. விண்வெளிப் பயணம் சில தீவிரமான சூழல்களை எதிர்கொண்ட போதிலும், விண்கலத்தின் வெப்ப கவசம் அனைவரையும் பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வந்தது. இந்த பயணத்தில், ஜாரெட் ஐசக்மேன் மற்றும் சாரா கில்லிஸ் இருவரும் விண்வெளி நடைப்பயணம் மேற்கொண்டனர். மேலும், சாரா கில்லிஸ் விண்வெளியில் வயலின் வாசித்தது குறிப்பிடத்தக்கது. அன்னா மேனன் தனது குழந்தைகளுக்கு விண்வெளியில் இருந்து புத்தகம் வாசித்தது மற்றொரு சிறப்பான நிகழ்வு.