அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், கலிபோர்னியாவின் வாண்டன்பெர்க் ஸ்பேஸ் ஃபோர்ஸ் தளத்தில் இருந்து 20 புதிய ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இதில் 13 செயற்கைக்கோள்கள் நேரடி செல்போன் இணைப்புகள் வழங்குவதற்காக அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்பேஸ் எக்ஸின் பால்கன் 9 ராக்கெட் மூலம் இந்த செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. ராக்கெட்டின் முதல் நிலை பகுதி தனது 10வது பயணத்தை வெற்றிகரமாக முடித்து, "ஆஃப் கோர்ஸ் ஐ ஸ்டில் லவ் யூ" என்ற ட்ரோன் கப்பலில் தரையிறங்கியது. இந்த புதிய செயற்கைக்கோள்கள் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தொகுப்பில் இணைக்கப்படும். இதன் மூலம், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தொகுப்பில் உள்ள செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 6,300 க்கும் மேலாக அதிகரித்துள்ளது.