கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் இணை தோற்றுநர் அஜய் சிங், தனது 10% பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார். இதன் மூலம், சுமார் 3,000 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளார். இந்தப் பங்கு விற்பனையை ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் மற்றும் ஜேஎம் பைனான்சியல் ஆகிய நிறுவனங்கள் நடத்த உள்ளன.
தற்போதைய நிலவரப்படி, வெறும் 4% சந்தை பங்கு மட்டுமே ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திடம் உள்ளது. வெறும் 22 விமானங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. மேலும், நிறுவனத்தின் கடன் மதிப்பு 9000 கோடி ரூபாயாக உள்ளது. இந்த நிலையில், விமான குத்தகை நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை தள்ளி வைத்ததால், ஸ்பைஸ் ஜெட் மீது திவால் நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது. எனவே, அஜய் சிங் தனது பங்குகளை விற்க உள்ளார். இந்த விற்பனைக்கு பிறகு அவரிடம் உள்ள ஸ்பைஸ் ஜெட் பங்குகள் 30 முதல் 35% ஆக குறையும். ஏற்கனவே 38.8% பங்குகள் கடன் வழங்குனர்களிடம் பிணை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.