இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தனியார் மயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.
இலங்கை, கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. சுற்றுலாவை பெரிதும் நம்பி இருந்த இலங்கை, கொரோனா காரணமாக பெரிதும் பாதிப்படைந்தது. அத்துடன், சுற்றுலாவைச் சார்ந்து இயங்கும் விமானச் சேவையும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இந்நிலையில், நிதி நெருக்கடியைச் சமாளிக்க, இலங்கை அரசுக்கு சொந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை தனியார் மயமாக்க இலங்கை அரசாங்கம் முடிவு எடுத்துள்ளது. அந்த வகையில், நிறுவனத்தின் 49 சதவீத பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட உள்ளன. இந்தியாவில், இதே போன்ற நிதி நெருக்கடி சூழலில், அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் கைப்பற்றியது. எனவே, தற்போதைய நிலையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை கைப்பற்ற போகும் தனியார் நிறுவனம் எது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய விமானச் சேவை நிறுவனங்கள் ஓரளவுக்கு சீரான நிலையில் இயங்கி வந்தாலும், புதிய ஒப்பந்தங்களை ஏற்கும் அளவிற்கு இல்லை. எனவே, இந்திய விமான சேவை நிறுவனங்கள் எதுவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதே வேளையில், மேற்கு ஆசியாவைச் சேர்ந்த விமான நிறுவனங்கள், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை வாங்குவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.