இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ், தனது ஒன்பதாவது விண்வெளி நடை மூலம் புதிய சாதனை படைத்துள்ளார். ஜனவரி 30 அன்று சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வெளியேறி, 5 மணி 26 நிமிடங்கள் விண்வெளி நடை புரிந்துள்ளார். இதன் மூலம் மொத்தம் 62 மணிநேரத்திற்கும் அதிகமாக விண்வெளியில் காலடி எடுத்து வைத்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு, 60 மணி 21 நிமிடங்கள் விண்வெளி நடை புரிந்த பெக்கி விட்சனியின் சாதனையை முறியடித்துள்ளார். இந்த விண்வெளி நடையில் அவர் வன்பொருள் பராமரிப்பு பணிகளைச் செய்ததோடு, தேவையற்ற தொலைத்தொடர்பு சாதனங்களை அகற்றியும் உள்ளார்.
அத்துடன், டெஸ்டினி ஆய்வகம், குவெஸ்ட் ஏர்லாக் பகுதிகளில் இருந்து மாதிரிகளைச் சேகரித்து, அவற்றில் நுண்ணுயிரிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முயற்சி நாசாவின் 72வது விண்வெளி பயணத்தின் ஒரு பகுதியாகும். சுனிதா வில்லியம்ஸுடன் புட்ச் வில்மோரும் இந்த விண்வெளி நடையில் பங்கேற்றார். அமெரிக்க நேரப்படி காலை 8 மணிக்கு (EST) தொடங்கிய இந்த நடவடிக்கையில், சிவப்புக் கோடுகள் கொண்ட பாதுகாப்பு உடையை அணிந்து சுனிதா வில்லியம்ஸ் பங்கேற்றார். கடந்த வாரம், விண்வெளி வீரர் நிக் ஹேக்குடன் இணைந்து அவரும் மற்றொரு விண்வெளி நடை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.