ஜூன் காலாண்டில் சுஸ்லான் எனர்ஜி நிறுவனம் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதை அடுத்து, அதன் பங்கு விலை கிட்டத்தட்ட 37% உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நிறுவனத்தின் மதிப்பு ரூ. 1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
இன்று, சுஸ்லான் எனர்ஜி பங்கு 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ.75.39 ஐ எட்டியது. கடந்த மூன்று மாதங்களில் பங்கு விலை 90%, ஒரு வருடத்தில் 280% மற்றும் இரண்டு ஆண்டுகளில் 960% உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் காலாண்டில் சுஸ்லான் எனர்ஜி ரூ. 302 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டை ஒப்பிடும்போது 200% உயர்வாகும். மேலும், நிறுவனத்தின் வருவாய் 50% அதிகரித்துள்ளது. அத்துடன், ரெனோம் எனர்ஜி சர்வீசஸ் நிறுவனத்தில் 76% பங்குகளை ரூ. 660 கோடிக்கு வாங்குவதற்கான ஒப்புதலும் கிடைத்துள்ளது. இவை சுஸ்லான் எனர்ஜி பங்கு உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.