தமிழகத்துக்கு ரூ.1200 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு தொகை நிலுவையில் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட துணை கேள்வி குறித்து நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறுகையில், ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குகிறது. ஜிஎஸ்டி வசூலிக்கப்படாத கோவிட் காலங்களில் கூட, 2020-21 மற்றும் 2021-22ம் ஆண்டுகளில் ரூ.1.1 லட்சம் கோடி மற்றும் ரூ.1.59 லட்சம் கோடி கடனைப் பெற்று பிறகு மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு இழப்பீடு வழங்கி உள்ளது. ஜூன் 2022 நிலவரப்படி மொத்தம் ரூ.17,176 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போதைய நிலவரப்படி, ஜூன் வரையிலான அனைத்து நிலுவைத் தொகைகளையும் நாங்கள் ஓரளவு செலுத்தியுள்ளோம். நிலுவையில் உள்ள சுமார் ரூ.17,000 கோடி ரூபாய், வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டிற்கு ஜூன் 2022 நிலவரப்படி ரூ.1200 கோடி நிலுவையில் உள்ளது என்று கூறினார்.