இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், டாடா குழுமம் மற்றும் உலகின் முன்னணி செமிகண்டக்டர் நிறுவனமான அனலாக் டிவைசஸ் (ADI) கூட்டணியில் இணைந்துள்ளன. இந்த கூட்டு முயற்சியின் மூலம், இந்தியா, செமிகண்டக்டர் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதோடு, உலகளாவிய செமிகண்டக்டர் சந்தையில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று கருதப்படுகிறது.
டாடா எலக்ட்ரானிக்ஸ், டாடா மோட்டார்ஸ் மற்றும் தேஜஸ் நெட்வொர்க்ஸ் ஆகியவை அனலாக் டிவைசஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த கூட்டாண்மையின் மூலம், டாடா மோட்டார்ஸின் மின்சார வாகனங்கள் மற்றும் தேஜஸ் நெட்வொர்க்ஸ்-இன் நெட்வொர்க் உள்கட்டமைப்பில் அனலாக் டிவைசஸ்-இன் மேம்பட்ட செமிகண்டக்டர் தயாரிப்புகள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக, டாடா எலக்ட்ரானிக்ஸ் குஜராத்தில் 11 பில்லியன் டாலர் மற்றும் அசாமில் 3 பில்லியன் டாலர் என மொத்தம் 14 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது. மேலும், இந்தியாவின் செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியை மேம்படுத்தும் பொருட்டு, ASMPT சிங்கப்பூர் மற்றும் டோக்கியோ எலக்ட்ரான் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் டாடா குழுமம் கூட்டு சேர்கிறது.