டாடா குழுமத்தை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம், டாடா கேப்பிட்டல் நிறுவனத்துடன் இணைக்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. டாடா கேப்பிட்டல் மற்றும் டாடா மோட்டார்ஸ் பைனான்ஸ் நிறுவனங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இதற்கான அனுமதியை வழங்கி உள்ளனர். NCLT வழியாக இந்த இணைப்பு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாடா கேப்பிட்டல் உடன் டாடா மோட்டார் பைனான்ஸ் இணைவதை ஒட்டி, டாடா கேப்பிட்டல் நிறுவனம் தனது பொது பங்குகளை டாடா மோட்டார் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு வழங்க உள்ளது. அதன்படி, இரு நிறுவனங்களின் இணைப்பில் உருவாகும் புது நிறுவனத்தில், 4.7% பங்களிப்பு டாடா மோட்டார்ஸ் வசம் இருக்கும். இரு நிறுவனங்களின் இணைப்புக்கு 9 முதல் 12 மாத காலம் ஆகலாம் என கூறப்பட்டுள்ளது. இதற்கு, மத்திய ரிசர்வ் வங்கி, செபி உள்ளிட்டவற்றிலிருந்து முறையான ஒப்புதல்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.