பிரிட்டன் நாட்டின் தேசிய வேலைவாய்ப்பு அமைப்பின் (NEST) நிர்வாக கட்டமைப்புகளை டிஜிட்டல் முறைக்கு மாற்றும் திட்டத்தில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் இணைந்துள்ளது. இந்த டிஜிட்டல் மாற்றத்திற்கான ஒப்பந்தம் 1.9 பில்லியன் டாலர்கள் மதிப்பில் கையெழுத்தாகியுள்ளது. தற்போதைய நிலையில், 10 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. அதற்கான மதிப்பு 840 மில்லியன் யூரோக்களாக சொல்லப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கான காலக்கெடு 18 ஆண்டுகளாக பின்னர் விரிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த ஒப்பந்தம் பிரெஞ்சு நாட்டின் அடோஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த நிறுவனத்துடன் இணைந்து டி சி எஸ் நிறுவனம் பணியாற்றி வந்தது. தற்போது, அடோஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிந்து, டிசிஎஸ் நிறுவனத்திடம் முழுமையாக டிஜிட்டல் மாற்ற திட்டம் வழங்கப்பட்டுள்ளது. டிசிஎஸ் வரலாற்றில் இது மிகப்பெரிய ஒப்பந்தமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.