தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஓமர், அண்மையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில், ரசாயன ஆயுதங்களை நாய்கள் மீது ஒசாமா பின்லேடன் பரிசோதித்ததாக கூறியுள்ளார்.
பின்லேடனின் நான்காவது மகன் ஓமர், தான் ஆப்கானிஸ்தானில் இருந்த போது, பின்லேடன் தனக்கு துப்பாக்கி பயிற்சி அளித்ததாகவும், போர்ப்பயிற்சி அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சிறு வயதில் இதுபோன்ற சம்பவங்களால் தான் மோசமாக பாதிக்கப்பட்டதாகவும், அந்த நாட்களை மறக்க முயல்வதாகவும் தெரிவித்தார். மேலும் இயக்கத்தை தொடர்ந்து நடத்த தன்னை தேர்ந்தெடுத்ததாகவும், ஆனால் அதற்காக தன்னை ஒருபோதும் வற்புறுத்தியது இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும், பின்லேடனின் உடல் கடலில் வீசப்பட்டதாக அமெரிக்கா கூறுவதை தான் நம்பவில்லை எனவும் கூறியுள்ளார்.
தற்போது, ஓமர் பிரான்சில் ஒரு ஓவியராக உள்ளார். இந்நிலையில், ரசாயன ஆயுதங்களை நாய்கள் மீது பரிசோதித்ததாக அவர் கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.