தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கின் வடகிழக்கில், 50 மைல்கள் தொலைவில் உள்ள காவு சாப்புலு மலைத்தொடரில், கடந்த செவ்வாய்க்கிழமை காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ, வேகமாகப் பரவி மற்றொரு மலைத்தொடரையும் ஆக்கிரமித்துள்ளது. இந்த காட்டுத் தீயை அணைக்க, அதிகாரிகள் 3 நாட்களாக போராடி வருகின்றனர்.
செவ்வாய் அன்று, மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட காட்டுத் தீ, காற்று காரணமாக வேகமாக பரவி உள்ளது. வியாழன் அன்று, காவு நாங்க் அணை மற்றும் அதை ஒட்டிய காட்டுப் பகுதிகளில் தீ பரவத் தொடங்கியது. தாய்லாந்து நாட்டின் பேரிடர் தடுப்பு துறையினர் தீயை அணைக்க இரவு பகலாக போராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. காட்டுத்தீ தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.