புகுஷிமா அணு உலையின் கழிவுநீர் ஆகஸ்ட் 24 முதல் கடலில் திறந்து விடப்படும் என ஜப்பான் பிரதமர் கிஷிடா கூறியுள்ளார்.
ஜப்பானில் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக சுனாமி ஏற்பட்டது. அப்போது கடல் அலைகள் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தின் உள்ளே புகுந்தது. இதனால் மின் மற்றும் குளிரூட்டும் அமைப்புகள் சேதம் ஆகின. இதனை தடுக்க கடல் நீர் மற்றும் போரிக் அமிலம் பெரிய அளவில் ஆலைக்குள் செலுத்தப்பட்டது. இதனால் அசுத்தமான கடல் நீர் அங்கு தேங்க ஆரம்பித்தது. இந்நிலையில், இந்த நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டால் தான் அணுமின் நிலையத்தை செயல் இழக்க செய்ய இயலும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நீரை கடலுக்குள் விடுவதற்கு ஜப்பான் நாட்டை சேர்ந்த உள்ளூர் மீனவர்கள் மற்றும் சீனா, தைவான் போன்ற சில கிழக்கு ஆசிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நீர் கடல் வாழ் உயிரினங்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று சர்வதேச அணுசக்தி முகமையும், ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பும் உறுதியாக கூறுகின்றன. எனவே ஜப்பானின் இந்த நடவடிக்கைக்கு அவர்கள் அனுமதி அளிக்கின்றனர்.
இந்நிலையில், வருகிற 24-ஆம் தேதி முதல் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீர் வெளியேற்றப்படும் என ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கதிரியக்க நீர் ஜப்பானிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பசிபிக் கடலுக்கு அடியில் உள்ள ஒரு சுரங்கப்பாதை மூலம் வெளியேற்றப்படும். அதற்கான நடவடிக்கைகள் ஜப்பான அரசு தொடங்கிவிட்டது. இந்த நீரை முழுமையாக வெளியேற்ற பல ஆண்டுகள் ஆகும் என கூறப்பட்டுள்ளது.