நீல நிற டிக் பெற சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் பயனர்கள் மாதத்திற்கு 20 டாலர்கள் செலுத்த வேண்டும் என அந்நிறுவனத்தின் உரிமையாளர் எலோன் மஸ்க் கூறியுள்ளார்.
ட்விட்டரின் புதிய உரிமையாளர் எலோன் மஸ்க், பயனாளரின் பெயருக்கு அடுத்ததாக நீல நிற டிக் சேர்ப்பது தொடர்பான சரிபார்ப்புமுறை புதுப்பிக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார். சமீபத்தில், தனக்கு பின்தொடர்பவர்கள் பெரிய அளவில் இருந்தபோதிலும், மதிப்புமிக்க ப்ளூ டிக் மறுக்கப்பட்டதாக ஒரு பயனர் குற்றஞ்சாட்டியிருந்தார். அதனையடுத்து மஸ்க் இத்திட்டத்தை அறிவித்தார். புதிய சரிபார்ப்பு செயல்முறை பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளிவரவில்லை என்றாலும், ட்விட்டர் நிறுவனம் விரைவில் ப்ளூ டிக்கிற்கு பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கும் என்று தெரிகிறது.
நீல நிற டிக் ட்விட்டர் ப்ளூ உறுப்பினர்களுக்கு மட்டுமே இருக்கும். ட்விட்டரின் இந்த சந்தாவானது, ட்வீட்களைத் திருத்துதல் மற்றும் அழித்தல் போன்ற கூடுதல் அம்சங்களைக் கொண்டு வருகிறது. ப்ளூ கட்டணத்தை தோராயமாக ரூ. 1,600 ஆக உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், ஏற்கனவே சரிபார்க்கப்பட்ட பயனர்கள் Twitter Blue-வில் சேர 90 நாட்கள் கால அவகாசம் கிடைக்கும். இந்த செயல்முறையை மறுசீரமைக்க ட்விட்டர் பொறியியலாளர்களுக்கு காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. சரிபார்ப்பு செயல்முறை கடுமையானதா அல்லது மென்மையானதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.