உக்ரைன் புனரமைப்புக்காக 3 பில்லியன் டாலரை இங்கிலாந்து வழங்குகிறது.
ரஷிய-உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து உக்ரைன் தனது நிதியாதாரத்தை வலுப்படுத்த தனியார்துறை முதலீட்டாளர்களிடமிருந்து கூடுதல் உதவியை எதிர்பார்க்கிறது. பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட முக்கிய பொது சேவைகளை மேம்படுத்த உக்ரைன் உலக வங்கி கடன்களை பெறுவதற்கு இங்கிலாந்தின் ஆதரவு வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷியப் படைகளுக்கு எதிராக போராடி வரும் உக்ரைனுக்கு அதன் பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக, அடுத்த மூன்று ஆண்டுகளில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் உதவி செய்யப்போவதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அறிவித்திருக்கிறார்.
மேலும் உக்ரைனை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடும் நோக்கில், 61 நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரமுகர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களும், உலகளாவிய முதலீட்டாளர்களும் லண்டனில் இரண்டு நாள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். உக்ரைன் எதிர்பார்க்கும் உதவிகளை திட்டமிடுவதற்காக "சர்வதேச உக்ரைன் மீட்பு மாநாடு 2023" என்ற பெயரில் இந்த மாநாடு நடைபெறுகிறது.