புதிய தொழில்நுட்ப உதவியுடன், விண்வெளியில், ராட்சச கருந்துளை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளைகளில் இதுவே மிகப் பெரியதாக சொல்லப்பட்டுள்ளது. ‘தி ராயல் அஸ்ட்ரானமிக்கல் சொசைட்டி’ என்ற ஆய்வு இதழில் இது குறித்த விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருந்துளை, சூரியனை விட 30 பில்லியன் மடங்கு பெரியதாக உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ‘கிராவிட்டேஷனல் லென்சிங்’ என்ற புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அருகில் உள்ள கேலக்ஸி ஒரு லென்ஸ் போல செயல்பட்டு, தூரத்தில் உள்ள பொருட்களை கண்டுபிடிக்க உதவுகிறது. மேலும், கருந்துளையால் ஒளி எவ்வாறு வளைக்கப்படுகிறது என்பது குறித்தும் ஆய்வு செய்ய முடிகிறது. எனவே, இந்த புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன், பூமியிலிருந்து தொலைதூரத்தில் உள்ள மேலும் பல கருந்துளைகளை கண்டுபிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.