மங்கோலியாவில், இந்தியா உள்ளிட்ட 20 நாடுகள் பங்கேற்கும் 14 நாள் சர்வதேச அமைதிப்படை ராணுவ பயிற்சி நடைபெற்று வருகிறது. கடந்த திங்கட்கிழமை தொடங்கப்பட்ட இந்த பயிற்சியில், மங்கோலிய பாதுகாப்பு படை, அமெரிக்காவின் பசிபிக் படை ஆகியவை பயிற்சியை வழிநடத்துகின்றன. இந்த ராணுவ பயிற்சிக்கு எக்ஸ் கான்க்வெஸ்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மங்கோலிய நாட்டு அதிபர் உக்நாகின் குரல்சுக் இந்த பயிற்சியை தொடங்கி வைத்தார். இந்த பயிற்சியில், இந்தியாவில் இருந்து கர்வால் ரைஃபில்ஸ் ராணுவப் படை பிரிவினர் பங்கேற்றுள்ளனர்.
இந்த பயிற்சியின் மூலம், பல்வேறு நாடுகளின் ராணுவங்களுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு மேம்படும். மேலும், நாடுகளுக்கு இடையிலான உறவு வலுப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியின் முக்கிய நோக்கமாக ஐநா சபையின் அமைதி காக்கும் படைக்கு பயிற்சி வழங்குவது சொல்லப்பட்டுள்ளது. மேலும், இந்த பயிற்சி நடவடிக்கையின் போது, பல்வேறு ராணுவத்தினர் தங்கள் அனுபவத்தை பகிர்வதால், அமைதிப்படையின் வீரர்களை தயார் படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.