அமெரிக்காவில் கிட்டத்தட்ட 356 நிறுவனங்கள் நிகழாண்டில் திவாலாகி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பதிவாகும் திவால் நிலவரம் ஆகும். மேலும், கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட 2020 ஆம் ஆண்டை விட இது உயர்வாகும். இதை வைத்து, அமெரிக்க பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
உலக அளவில் கிட்டத்தட்ட 7000 ஜோம்பி நிறுவனங்கள் உள்ளதாக எஸ் அண்ட் பி குளோபல் மார்க்கெட் இன்டெலிஜென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜோம்பி நிறுவனங்கள் என்பது கடன் நிலையில் உள்ள வணிக நிறுவனங்களாகும். இவற்றின் செயல்பாட்டு செலவினங்கள் போக கடனுக்கான வட்டியை மட்டுமே செலுத்தும் நிலையில் இருப்பவை ஆகும். இந்நிலையில், அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 2000 ஜோம்பி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக எஸ் அண்ட் பி நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், வேலைவாய்ப்பின்மை 4.1% அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், இந்த பொருளாதார மந்த நிலை அடுத்த ஓராண்டுக்கு நீடிக்கும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.