புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதத்தில், ஐநா சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ், இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த, உலக நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லை என்றால், மோசமான விளைவுகளை எதிர் கொள்ள வேண்டும்” என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. தற்போது விஞ்ஞானிகளின் எச்சரிக்கையை எளிமையாக பொது மக்களுக்கு உணர்த்தும் வகையில், அனிமேஷன் வீடியோ ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது.
நாசா வெளியிட்டுள்ள வீடியோவில், வட்ட வடிவ கண்ணாடி ஜன்னல் வழியே கடல் நீர்மட்டம் உயருவது காட்டப்பட்டுள்ளது. அதில், 3000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து 100 வருடங்களுக்கு முன்னால் வரை, கடல் நீர் மட்டம் சராசரியாக சிறு சிறு மாற்றங்களுடன் நீடித்து வருகிறது. அதை தொடர்ந்து, கடந்த 100 வருடங்களில், பூமி ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்து, 160 முதல் 210 மில்லி மீட்டர் வரை கடல் நீர்மட்டம் உயருகிறது. இதுவே, கடந்த 30 ஆண்டுகளில், அதாவது 1993 முதல் 2023 வரை, மிக மிக வேகமாக கடல் நீர் மட்டம் உயர்கிறது.இந்த காணொளி சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.