வோடபோன் நிறுவனம், 1600 கோடி ரூபாய் மதிப்பில், ஏடிசி டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்திற்கு கடன் பத்திரங்களை வழங்க உள்ளது. வோடபோன் நிறுவனத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தொலைத்தொடர்பு சாதனங்கள் விநியோகிக்கும் ஏடிசி டெலிகாம் நிறுவனத்திற்கு, வோடபோன் நிறுவனம் 1600 கோடி ரூபாய் தொகை செலுத்த வேண்டியது நிலுவையில் இருந்தது. இதை, 18 மாதங்களில் செலுத்த முடியாத பட்சத்தில், அதற்கு ஈடான பங்குகளை வழங்க, கடந்த 21 ஆம் தேதி வோடபோன் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கினர். அதன்படி, பங்குகளாக மாற்றத்தக்க 1600 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்கள், ஆண்டுக்கு 11.2% ஈவுத் தொகையுடன் ஏடிசி டெலிகாம் நிறுவனத்திற்கு வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 16000 கோடி வட்டி நிலுவைத் தொகையையும் பங்குகளாக மாற்ற வோடபோன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.