வோல்வோ நிறுவனம் புதிதாக மின்சார கார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. எக்ஸ் சி 40 ரீசார்ஜ் என்ற வோல்வோ மின்சார கார் இந்திய சந்தையில் 54.95 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்திற்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு, வோல்வோ நிறுவனத்தின் எக்ஸ் சி 40 ரீசார்ஜ் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, இந்த வாகனத்தின் மேம்படுத்தப்பட்ட மாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாகனம் 238 எச்பி திறன் கொண்டுள்ளது. அத்துடன், வெறும் 7.3 வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் என சொல்லப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 475 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. வாகனத்தை வெளியிட்டு பேசிய வோல்வோ நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குனர் ஜோதி மல்கோத்ரா, இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் புதிய பேட்டரி வாகனத்தை அறிமுகம் செய்ய வோல்வோ திட்டமிட்டுள்ளதாக கூறினார்.