பயனர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்களை வாட்ஸ் அப் அறிமுகம் செய்து வருகிறது. அண்மையில், வீடியோ அழைப்புகளில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை வெளியிட்டது. தொடர்ந்து, பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்கும் நோக்கில், வாட்ஸ் அப்பில் பாஸ் கீ கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளிவந்தது. தற்போது, வாட்ஸ் அப் அழைப்புகளை முன்கூட்டியே திட்டமிடலாம் என கூறப்பட்டுள்ளது. இது தற்போதைய நிலையில் பீட்டா பயணர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் செயலியின் புதிய மேம்படுத்தல் அம்சங்களை வெளியிடும் WABetaInfo இந்த தகவலை தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப் குரூப்களில், வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அழைப்புகளை முன்கூட்டியே திட்டமிட முடியும். இதன் மூலம், குரூப் உறுப்பினர்கள் அழைப்பிற்கு தயாராக இருக்க முடியும். அத்துடன், அழைப்பு தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன், இது தொடர்பான நோட்டிபிகேஷன் வெளியிடப்படும். இதன் மூலம், குரூப் உறுப்பினர்கள் அழைப்பை தவறவிடும் நிலை தவிர்க்கப்படும். இதற்காக, 'செட்யூல் கால்' என்ற பிரத்தியேக பொத்தான் கொடுக்கப்பட உள்ளது.