ஒரு பெண்ணின் எச்சிலை சோதனை செய்தே, அவர் கர்ப்பமாக உள்ளாரா இல்லையா என்பதை தெரிவிக்கும் கருவி முதல்முறையாக பிரிட்டனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாலிஸ்ட்டிக் (Salistick) என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், கருத்தரிப்பை கணிக்க உதவும் சிறுநீர் சோதனைக்கு மாற்றாக இந்த எச்சில் பரிசோதனை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், பிரிட்டன் மற்றும் அயர்லாந்து பகுதிகளில் இந்த பரிசோதனை கருவி கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. ஜெருசலேமை தலைமையாக கொண்டு இயங்கும் Salignostics என்ற புத்தாக்க நிறுவனம் இந்த கருவியை வடிவமைத்துள்ளது.
கொரோனா பாதிப்பை கண்டறிய, எச்சில் பரிசோதனை செய்யப்படுகிறது. அதனை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய கருவி மூலம், எந்த நேரத்திலும், எந்த இடத்தில் இருந்தாலும், கருத்தரிப்பு பரிசோதனை மேற்கொள்ள முடியும். எனவே, பெருவாரியான மக்கள் இதன் மூலம் பயனடைவர் என்று தெரிவித்துள்ளது. மேலும், "ஒரு தெர்மாமீட்டரை போல வாயில் குறிப்பிட்ட சில நிமிடங்களுக்கு இந்த கருவியை வைத்திருக்க வேண்டும். அப்போது, பெண்ணின் எச்சில் மாதிரிகள் கருவியில் சேகரிக்கப்படும். அதனை கொடுக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் டியூப்பில் போடும் பொழுது, மரபு வகையில் பரிசோதிக்கப்படும் எச் சி ஜி சோதனை போல இது செயல்படும். இதற்கு 5 முதல் 15 நிமிடங்கள் எடுக்கும்" என்று தெரிவித்துள்ளது.