இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக உலக மல்யுத்த சம்மேளனம் தெரிவித்துள்ளது. மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை உரிய காலத்திற்குள் நடத்தாததால், அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 30ஆம் தேதி, அடுத்த 45 நாட்களுக்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த கால அவகாசம் நிறைவடைந்த பின்னும், தேர்தல் நடத்தப்படவில்லை. அது தவிர, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளனர். இது தொடர்பாக பெரும் போராட்டம் நடைபெற்றது. தற்போது, இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மல்யுத்த வீரர் - வீராங்கனைகள், போட்டிகளில் குறிப்பிட்ட நாடு என அடையாளப்படுத்த முடியாது.