ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள், நிறுவனத்தை சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா நிறுவனத்துடன் இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளனர். அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நிறுவனங்களின் இணைப்புக்கு 99.99% பங்குதாரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த ஒப்புதல், நிறுவனங்களின் இணைப்புச் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் முக்கிய நகர்வாகும் என்று ஜீ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 22ஆம் தேதி, ஜீ நிறுவனத்தை சோனியுடன் இணைப்பதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தத்தின்படி, இரு நிறுவனங்களின் இணைப்புக்கு பின்னர், ஜீ நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் புனித் கோயங்கா, தொடர்ந்து தலைமை பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டது. மேலும், 9 பேர் கொண்ட நிர்வாகக் குழுவில், சோனி நிறுவனத்தின் சார்பில் 5 பேரும், 3 சுயேச்சை உறுப்பினர்களும் இடம்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர், நிறுவனங்களின் இணைப்பு தொடர்பாக, பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி, என்சிஎல்டி யின் மும்பை பெஞ்ச், பொதுக்குழு கூட்டம் கூட்டி, ஜீ நிறுவனத்தை சோனியுடன் இணைப்பதற்கு பங்குதாரர்களின் ஒப்புதலை பெற வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அதன் படி, அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு, சுகைல் நதானி தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்திற்கு முன்பாக, நிறுவனங்களின் இணைப்பு குறித்து உரிய ஒப்புதல்களை மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் இருந்து ஜீ நிறுவனம் பெற்றிருந்தது. மேலும், காம்படிஷன் கமிஷன் ஆப் இந்தியா (சி சி ஐ) இடம் இருந்தும் உரிய அனுமதி பெறப்பட்டது. இறுதியாக, பங்குதார்களின் ஒப்புதல் பெறப்பட்டது.
இது குறித்து பேசிய ஜீ நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான புனித் கோயங்கா, “நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சார்பில், பங்குதாரர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நிறுவனத்தின் மீது பங்குதாரர்களுக்கு இருக்கும் அதீத நம்பிக்கை மற்றும் தொடர் ஆதரவுக்கு தலைவணங்குகிறேன். இந்த நிறுவனத்தின் இணைப்பு மூலம் நாம் மென்மேலும் உயர் நிலையை எட்டுவோம் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.