ஜொமோட்டோ, புதிதாக 'இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்' என்கிற புதிய சேவையைத் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக ஜொமோட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் தனது வலைதள பக்கத்தில், "கொல்கத்தாவில் இருந்து ரசகுல்லா, ஹைதராபாத்தில் இருந்து பிரியாணி, பெங்களூரில் இருந்து மைசூர் பாக், லக்னோவில் இருந்து கபாப், டெல்லியில் இருந்து பட்டர் சிக்கன் போன்ற தனித்தன்மை கொண்ட உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர் செய்து ருசிக்க இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ் திட்டம் உதவும்" என்று தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த சேவை குர்கான் மற்றும் தெற்கு டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்து விரைவில் நாடு முழுவதும் இந்த சேவையை விரிவுபடுத்த ஜொமோட்டோ திட்டமிட்டுள்ளது. குர்கான் மற்றும் தெற்கு டெல்லியில் வசிப்பவர்கள் ஆர்டர் செய்ய வேண்டிய நகரங்களின் பட்டியலில் கொல்கத்தா, ஹைதராபாத், லக்னோ, ஜெய்ப்பூர், பெங்களூர், மதுரா, சென்னை, ஆக்ரா மற்றும் புவனேஸ்வர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இதில், நகரின் சில பழமையான மற்றும் பேமஸ் உணவகங்கள் மட்டும் டெலிவரிக்கு அனுமதிக்கப்படுகின்றன. இந்த சேவை மூலம் உணவு ஆர்டர் செய்பவர்களுக்கு உணவகங்களில் புதிதாக தயார் செய்யப்பட்டு விமானம் மூலம் அனுப்பப்படும். விமானப் பயணத்தின் போது உணவு பாதுகாப்பாக இருப்பதற்கு ஏதுவாக மொபைல் குளிர்பதன தொழில்நுட்பம் மூலம் உணவு பாதுகாக்கப்படும்.
அடுத்து சில வாரங்களில் இந்த சேவை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் ஜொமோட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.