வாடகை கார் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஜூம் கார் நிறுவனம், இன்னோவேடிவ் இன்டர்நேஷனல் அக்யூஷன் கார்ப்பரேஷன் (Innovative International Acquisition Corp) உடன் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம், அமெரிக்க பங்குச் சந்தை நாஷ்டாக்கில் (Nasdaq) பொதுத்துறை நிறுவனமாக பட்டியலிடப்பட உள்ளது. இணைப்பிற்கு பின்னர், ஜூம் கார் நிறுவனத்தின் மதிப்பு 456 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. அத்துடன், ஜூம் கார் ஹோல்டிங்ஸ் ஐஎன்சி (Zoomcar Holdings Inc) என்ற புதிய பெயரில் நாஸ்டாக்கில் இது பட்டியலிடப்பட உள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூம்கார் நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது, 50 சர்வதேச நகரங்களில் இந்த நிறுவனம் வாடகை கார் சேவையை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில், இதுவரை, 25,000 மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் மூன்று மில்லியன் வாடிக்கை பயனாளர்கள் உள்ளனர். இந்த நிறுவனத்தின் இணைப்பு குறித்து பேசிய தலைமை செயல் அதிகாரி கிரேக் மோரான், “நிறுவனத்தின் எதிர்கால விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு இந்த இணைப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தென்கிழக்கு ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் நிறுவனத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.
இன்னோவேடிவ் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மோகன் ஆனந்தா, ஜூம் கார் நிறுவனத்துடன் ஆன இணைப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், ஜூம் கார் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். பல்வேறு நிறுவனங்களின் இணைப்பு சார்ந்த வர்த்தகத்தில் இன்னோவேடிவ் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன் நிறுவனம் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.